புதுக்கோட்டை கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமே ஆகும். அப்பழைய கோட்டையின் பெயர் பொப்பண்ண கோட்டை என்பதாகும்.
மக்கள் வழக்கில் தற்போது அக்கோட்டை பொற்பனைக் கோட்டை என்று அழைக்கப் பெறுகின்றது. இக்கோட்டையின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பொப்பண்ண முனீஸ்வரர் என்ற காவல் தெய்வமே தற்போதைய புதுக்கோட்டை நகரத்தவர்க்கு கண்கண்ட காவல் தெய்வமாகும். பொற்பனை ஈஸ்வரன் கோயிலின் பனை மரங்கள் பொன்னால் ஆன காய்களை காய்த்ததாக ஒரு புராணக் கதையைக் கூறி அந்தத் தெய்வத்திற்கு பொற்பனை முனீஸ்வரன் என்றும், அங்குள்ள கோட்டையை பொற்பனைக் கோட்டை என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால் அந்தக் கோட்டைதான் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்ற செய்தி தமிழ் கூறு நல்லுலகம் அறியாத செய்தியாகும்.
சங்க காலக் கோட்டை
பல நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் அமைந்த வட்ட வடிவ மண் கோட்டை, சுற்றிலும் அமைந்த அகழி ஆகியவற்றோடு தற்போது காணப்பெறும் பொப்பண்ண கோட்டை ஏறத்தாழ 50 அடி உயரமும், 50 அடி அகலமும் உடைய மண்மேடுடைய கோட்டையாக விளங்குகிறது. அகலமான இம்மண் கோட்டை மீது செங்கல்லால் அமைந்த நெடுமதில் முன்பு இருந்து காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், மனிதர்களின் தேவையாலும் அழிந்துவிட்டது.
புதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்களிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.
பொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.
No comments:
Post a Comment